Manufacturing Consent வாசிப்பு

Manufacturing Consent வாசிப்பு

Published by Arun Isaac on

In other languages: English

Tags: அரசியல்

இரண்டு வாரங்களுக்கு முன், அக்டோபர் 15 அன்று, IISc Concern யில் எட்வர்ட ஹெர்மேன் மற்றும் நோம் சோம்சுக்கியின் Manufacturing Consent யிலுருந்து முதல் அதிகாரத்தைப் படித்தோம். அதில் செய்தி நிறுவனங்கள் எவ்வாறு அரசுக்கும் அதிகாரமுடையோர்க்கும் பாரபட்சமாக செயல்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளனர். இது அவர் கூறும் ஐந்து காரணிகள் பற்றின சிறுகுறிப்பு.

இரண்டு வாரங்களுக்கு முன், அக்டோபர் 15 அன்று, IISc Concern யில் எட்வர்ட ஹெர்மேன் மற்றும் நோம் சோம்சுக்கியின் Manufacturing Consent யிலுருந்து முதல் அதிகாரத்தைப் படித்தோம். அதில் செய்தி நிறுவனங்கள் எவ்வாறு அரசுக்கும் அதிகாரமுடையோர்க்கும் பாரபட்சமாக செயல்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளனர். அவர் கூறும் ஐந்து காரணிகள் பற்றின சிறுகுறிப்பைக் கீழ்காணலாம். எடுத்துக்காட்டுகளுடன் கூடிய விவரமான விளக்கங்களுக்கு புத்தகத்தைப் படிக்கவும்.

தேவையான முதலீடும் இலாப நோக்கமும்

செய்தி துறையில் சில பெரிய நிறுவனங்களே உள்ளன. புதிய நாளிதழோ தொலைக்காட்சி அலைத்தடமோ துவக்குவது எளிதல்ல. அதற்கு அதிகமான முதலீடு தேவை. அதனால் புதிய செய்தி நிறுவனங்கள் உருவாகி மாற்றுக்கருத்துகளை வெளியிடுவது மிகக் கடினம். மேலும், இச்செய்தி நிறுவனங்களும் செய்தியாளர்களும் அவர்கள் பங்குதாரரின் இலாப நோக்கத்தினால் தனித்தியங்க முடியாமல் இருக்கின்றன.

விளம்பரதாரரின் தாக்கம்

பாட்டாளி மக்களிடம் பொருள் வாங்கும் திறன், அதாவது பணம், கம்மியாக உள்ளதினால், அவர்களை நோக்கி விளம்பரங்களைச் செலுத்திப் பெரிய அளவில் பயனில்லை. எனவே பாட்டாளி மக்கள் படிக்கும் நாளிதழ்களில் விளம்பரங்கள் இட விளம்பரதாரர் விரும்பமாட்டார். விளம்பரமில்லாத நாளிதழ்களை விட விளம்பரங்களுடைய நாளிதழ்களால் அவர் இதழ்களை மலிவான விலையில் விற்க முடியும். அதனால் விளம்பரதாரரின் ஆதரவில்லாமல் பாட்டாளி மக்கள் படிக்கும் நாளிதழ்கள் போட்டிப் போட முடியாமல் அழிந்துப் போகின்றன. மீதம் இருப்பது மேல்தட்டு மக்களுக்காக வெளியிடப்படும் விளம்பரங்களைக் கொண்ட நாளிதழ்களே. அவை நடைமுறை நிலையில் பெரிதளவு குறை காணாமல் விளம்பரதாரரின் பொருள் விற்பனைக்கேற்றவாறே செயல்படுகின்றன.

செய்திகளைச் சேகரிப்பது

செய்தி நிறுவனங்களால் எல்லா இடங்களிலும் செய்தியாளர்களை வைத்திருக்க முடியாது. எனவே தினமும் செய்திகள் கிடைக்கின்ற அரசுத்துறைகளிலும் பெரிய தனியார் நிறுவனங்களிலுமே செய்தியாளர்களை வைத்திருப்பார்கள். இவ்வாறு அரசு அலுவலகர்களிடமிருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்களென்று கருதப்படுவோரிடமிருந்தும் பெறும் செய்தி நம்பக்மானதென்று பெரும்பான்மையோர் கருதுவதால் அச்செய்தியைத் தீர விசாரணையின்றி வெளியிடுகின்றனர். மாற்றுக்கருத்துகளைச் சேகரித்து சரி பார்த்து வெளியிடுவதைவிட இது அவர்களுக்கு எளிதாகவும் பொருளாதாரரீதியாகவும் சிக்கனமாக உள்ளது.

கண்டனம்

செய்தியறிக்கைகள் ஆளுங்கட்சியிடமிருந்தோ மேலிடங்களிலிருந்தோ கண்டனம் பெறலாம். நீதி மன்ற வழக்குகளிலும் போய் முடியலாம். நிதியளிப்பவர் நிதிநல்கையை விலக்கலாம். இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்க, செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்தியறிக்கைகளிலிருந்து சர்ச்சைக்குரிய அனைற்றையும் நீக்கி, அரசுக்கும் அதிகாரமுடையோருக்கும் சாதகமாகவே செய்தியளிக்கின்றனர்.

பொதுவுடைமைக்கு எதிர்ப்பு

பொதுவுடைமையும் அதனால் விளையும் பாட்டாளி மக்களின் விடுதலையும் முதலாளி வகுப்பின் அதிகாரத்தை அச்சுருத்திகின்றன. சோவியத்து உருசியா, சீனா, கியூபா போன்ற பொதுவுடைமை அரசுகளின் தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி பொதுவுடைமை கொடியத் தீமையே என்று ஆளும் வகுப்பு மக்கள் மனதில் நிலைநாட்டிவிட்டது. இச்சூழலைப் பயன்படுத்தித் தங்களுக்கெதிரான மாற்றுக்கருத்துகள் எதுவாக இருந்தாலும் அதனைப் பொதுவுடைமையென்று கூறி வளரவிடாமல் முறியடிக்கின்றனர்.